சமோசாவும் சட்னியும் கேட்டார், சாக்கடையைச் சுத்தம் செய்தார்

1 mins read

ராம்பூர்: உணவு தேவைப்படுவோருக்காக அறிவிக்கப்பட்ட அவசரகால தொடர்பு எண்ணை அழைத்து, சமோசாவும் சட்னியும் கேட்டவர், கடைசியில் சாக்கடையைச் சுத்தம் செய்யும் நிலைக்கு ஆளானார்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எவரும் உணவின்றி பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக உணவு தேவைப்படுவோருக்காக சட்டீஸ்கர் மாநிலம், ராம்பூர் மாவட்ட நிர்வாகம் அவசரகால தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

ஆனாலும், அதிகாரிகளை எரிச்சலடையச் செய்யும் நோக்கில் நாள்தோறும் பல அழைப்புகள் வருகின்றன. கடந்த சனிக்கிழமை அந்த எண்ணைத் தொடர்புகொண்ட ஒருவர் பீட்சா கேட்டார். மறுநாள் ஞாயிறன்று இன்னொருவர் சமோசாவும் சட்னியும் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இத்தகைய போக்கிரித்தனத்திற்கு ஒரு முடிவுகட்டத் திட்டமிட்டார் மாவட்ட நீதிபதி ஆஞ்சநேய குமார் சிங். சமோசா கேட்டவரைக் கண்டுபிடித்து, அவரது பகுதியிலேயே சாக்கடையைச் சுத்தம் செய்யவும் தெருக்கூட்டவும் வைத்து, அவமானப்படுத்தினார்.

வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களும் அவசரகால தொடர்பு எண்ணை அழைத்து சமைத்த உணவு கேட்கிறார்களாம்.

"ஏற்கெனவே உணவுப்பொருட்கள் வாங்கியவர்களும் தற்போது சமைத்த உணவை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களின் படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்," என்றார் திரு ஆஞ்சநேய குமார். மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், முடியாதவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்