மட்ரிட்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் நேற்று மேலும் 812 பேர் மாண்டனர். நேற்று முன்தினம் பதிவான மரணங்களைவிட இது சற்று குறைவு.
நேற்றைய நிலவரப்படி கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் மொத்தம் 7,340 பேர் மாண்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 6,528ஆக இருந்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 78,797லிருந்து 85,195க்கு அதிகரித்துள்ளதாக ஸ்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. இத்தாலிக்குப் பிறகு ஸ்பெயினில்தான் ஆக அதிகமான
மரணங்கள் பதிவாகியுள்ளன.
கிருமித்தொற்றுக்கு எதிராக ஸ்பெயின் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்பெயினில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஸ்பானிய மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் போதுமான படுக்கைகள் இல்லாமல் அந்நாட்டின் சுகாதாரத் துறை திக்குமுக்காடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களையும் மாநாட்டு மையங்களையும் தற்காலிக மருத்துவமனைகளாக ஸ்பானிய அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
சுகாதாரத் துறையினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா கிருமித்தொற்றால் ஸ்பெயினில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பொருளியலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து பொருளியலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், இத்தாலியப் பிரதமர் கியூசிப்பி கோண்ட்டே ஆகியோருடன் சேர்ந்து ஸ்பானியப் பிரதமர் திரு சாஞ்சேசும் அழைப்பு விடுத்துள்ளார்.

