உலக முழுவதும் கொரோனா கிருமி பிரச்சினை முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சென்ற ஞாயிற்றுக் கிழமை சிஎன்என் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஃபரீட் ஸக்காரியாவுக்கு அவர் பேட்டியளித்தார்.
"ஏதாவது நடந்தால் ஒழிய கிருமி பரவல் பிரச்சினை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும், உலகம் நீண்ட போராட்டத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் சொன்னார். கிருமிக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற்ற தாகக் கூறப்படுவதை பிரதமர் லீ ஏற்க மறுத்தார்.
கிருமி பரவலை சிங்கப்பூர் கட்டுப்படுத்தி வைத்துள்ளது என்று பரவலாகக் கூறப்படுகிறது.
"தற்போது வெற்றி பற்றி பேச தயக்கமாக உள்ளது, கொரோனா கிருமி பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்னமும் போராட்டத்தின் மத்தியில் இருக்கிறோம்," என்றார் திரு லீ.
"சில மாதங்களிலேயே கிருமி பரவல் பிரச்சினை ஓய்ந்துவிடாது. உலகின் இதர பகுதிகளான இந்தியா, தென்-கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடு களுக்கு ேமலும் பரவலாம். ஏதாவது நடந்தால் ஒழிய இதை தடுத்து நிறுத்த முடியாது, உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதால் முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்," என்றும் அவர் சொன்னார்.
கிருமி பரவலுக்கு எதிராக அமெரிக்கா ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் திரு ஃபரீட் கேள்வி கேட்டார். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் லீ, இந்தப் பிரச்சினையில் அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னிலை வகிக்க விரும்பவில்லை போல தெரிகிறது என்றார்.
"கடந்த ஆண்டுகளில் இத்தகைய நெருக்கடியான சமயங்களில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தால் உலகம் பயனடைந்தது. ஆனால் அமெரிக்கா மற்றொரு மனநிலையில் செயல்பட்டால் உலக நாடுகளுக்கு அது இழப்பாக அமையும். "மனிதகுலத்திற்கு எதிரான இந்தச் சவால்களில் அமெரிக்கா தனக்குள்ள பல வளங்களை முறையாக பயன்படுத்தவில்லை" என்று திரு லீ குறிப்பிட்டார்.
கிருமி பரவல் விவகாரத்தில் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வரும் சீனா-அமெரிக்கா உறவு பற்றியும் பிரதமர் கருத்துரைத்தார்.
"கிருமி பரவலுக்கு எதிராக இரு நாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும். துரதிர்ஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. கிருமி பரவலுக்கு முன்பே அெமரிக்கா-சீனா உறவில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் கிருமி பரவலைச் சமாளிக்க வேண்டுமானால் அமெரிக்கா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும்," என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

