நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா கிருமித் தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. இதில் திங்களன்று மாண்ட 540 பேரும் அடங்குவர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 163,000 மேல் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது ராய்ட்டர்ஸ் செய்தி.
இதற்கிடையே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க்கிற்கு சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக 1,000 படுக்கைகள் கொண்ட அமெரிக்கக் கடற்படை மருத்துவ
மனைக் கப்பலின் வருகை அமைந்துள்ளது.
இந்தக் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க போதுமான இடம் இருக்கும்.
"இது போர்காலச் சூழல். நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்," என்றார் நியூயார்க் மேயர் பில் டி பிளாசோ.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வரும் நிலையில் நியூயார்க் மருத்துவமனைகள் பலவும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், "நிலைமை தீவிரமடைந்துள்ளதால், நெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதலாக 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் தேவை. மருத்துவ தன்னார்வலர்கள் உடனடியாக முன்வந்து உதவி செய்ய வேண்டும். தயவு செய்து நியூயார்க் வந்து எங்களுக்கு உதவுங்கள்," என நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள தற்போதைய நெருக்கடியானது, நாடு முழுவதும் உள்ள பிற பகுதிகள் விரைவில் எதிர்கொள்ளக்கூடிய நிலைமையின் முன்னோட்டம் என ஆளுநரும் சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 1 மில்லியன் அமெரிக்கர்களுக்குக் கிருமித் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சொன்னார்.
அமெரிக்கா பரிசோதனைகளை அதிகரித்துள்ளபோதும், தனிநபர் அடிப்படையில் இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளைவிட அது குறைவு.

