அமெரிக்காவுக்கு வேதனை மிகுந்த அடுத்த இரு வாரங்கள்: எச்சரிக்கும் டிரம்ப்

2 mins read
971efcd3-0d6e-4672-ad26-b870ce753b91
தற்போது பின்பற்றப்படும் கைகுலுக்குவதைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை நீண்ட காலத்துக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டியதாக இருக்கும். படம்: ஏஎஃப்பி -

கொரோனா தொற்றுப் பாதிப்பால் வரும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிகவும் வேதனை மிகுந்த வாரங்களாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய அளவிலான 'சமூகத்திலிருந்து விலகியிருத்தல்' உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ள அவர், அதனைக் கடுமையாகக் கடைப்பிடித்தால்கூட சுமார் இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் வரை கணிசமான அளவுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வெளியான ஆய்வுகளைச் சுட்டிக் காட்டினார்.

வரும் கடுமையான நாட்களை எதிர்கொள்ள ஒவ்வோர் அமெரிக்கரும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த பல வாரங்களாகக் கிருமித் தொற்றைக் குறைவாக மதிப்பிட்டும் அமெரிக்காவில் அதன் தாக்கம் குறித்தும் கேள்வி எழுப்பி வந்த அவர், தற்போது கடுமையான, இருண்ட நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பான இடைவெளி, வழிகாட்டுதல்கள் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.

கிருமித் தொற்றால் அமெரிக்காவில் ஏற்படக்கூடிய உயிரிழப்பு, வியட்னாம் போரில் மாண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொற்றுக்கு அமெரிக்காவில் நேற்று வரை சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200,000ஐ நெருங்குகிறது. இதற்கிடையே, 7,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியைத் தணிக்க உதவும் வகையில், நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

#அமெரிக்கா #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்