சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் நான்காவது மரணம்

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் நான்காவது மரணம்

2 mins read
acd87d6e-9bfb-41ac-ba41-326f11127240
-

இந்தோனீசியாவைச் சேர்ந்த 68 வயது ஆடவர் இன்று (ஏப்ரல் 2) காலை கொவிட் - 19 கிருமித்தொற்றால் உயிரிழந்தார். இந்நோயால் சிங்கப்பூரில் ஏற்பட்ட நான்காவது மரணம் இது.

கொவிட் 19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்நோயாளி காலை 6.43 மணிக்கு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 476 ஆவது நபரான இந்த இந்தோனீசியருக்கு ஏற்கெனவே நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டையைக் கொண்ட இந்த ஆடவர் ஜனவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை இந்தோனீசியாவில் இருந்தார். சிங்கப்பூருக்கு வெளியில் அவருக்கு இந்நோய் தொற்றியது.

மார்ச் 29ஆம் தேதியன்று 70 வயது சிங்கப்பூர் ஆடவர் திரு சுங் ஆலே, கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானார். உயர் ரத்த அழுத்தமும் ரத்த கொழுப்பும் அவருக்கு இருந்தது. பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் அவர் அண்மையில் செல்லவில்லை. இதற்கு முன்னதாக மார்ச் 21ஆம் தேதி, 75 வயது சிங்கப்பூர் மூதாட்டியும் 64 வயது ஆடவரும் இந்நோயால் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணுக்கு நாட்பட்ட இதய நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்ததாகவும் ஆடவருக்கு இதய நோய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றிரவு நிலவரப்படி கொரோனா கிருமித்தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. புதிதாக 74 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதை சுகாதார அமைச்சு தெரிவித்தது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் 102 வயது மூதாட்டியும் ஒருவர். சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆக வயதானவர் அவர்.

இந்த 74 பேரில் 54 பேருக்கு உள்ளூரிலும் 20 பேருக்கு வெளிநாட்டிலும் கிருமித்தொற்று ஏற்பட்டது.