அமெரிக்காவில் ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

புதன்கிழமையன்று ஒரு நாள் மட்டும் கிருமித் தொற்றுக்குப் பலி யானவர்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.

சளி, காய்ச்சல், இருமலை ஏற்படுத்தும் கொரோனா கிருமி அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கிருமித் தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களைக் கணக்கிடுவது சிரமம். ஆனால் ஜான்ஸ் ஹாப்கின்ஸின் கொரோனா கிருமியின் தரவு புதன்கிழமை அன்று மட்டும் கிருமிக்கு 1,040 பேர் பலியானதாக தெரிவித்தது.

இதற்கு முந்தைய நாள் செவ்வாய்க் கிழமை அன்று ஒரே நாளில் 504 மரணங்கள் பதிவாகின.

மறுநாளே கிருமித் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக கூடியது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் கொரோனா கிருமி தலைகாட்டத் தொடங்கியது. அப்போது முதல் இன்று வரை 5,116 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர் என்று ‘யுஎஸ்ஏ டுடே’ தெரிவித்தது.

அமெரிக்கா முழுவதும் நேற்று வரை 250,000க்கும் மேற்பட்டோர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகில் கிருமி தொற்றிய ஒரு மில்லியன் பேருடன் ஒப்பிடுகையில் கால் பங்காகும்.

இந்த நிலையில் இம்மாதம் மத்தியில் அமெரிக்காவில் ஒரு நாளில் இறப்பவர்களின் எண் ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது, அமெரிக்காவில் ஒரு நாளில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையான 1,772ஐ மிஞ்சிவிடும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.