கோலாலம்பூர்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிறுவனங்களுக்கு உதவ மலேசியா 10 பில்லியன் ரிங்கிட் (S$3.3 பில்லியன்) அங்கீரித்து இருக்கிறது.
அந்தத் தொகையில் பெரும் பகுதி சம்பள மானியமாகக் கிடைக்கும். சென்ற மாதம் 5.9 பில்லியன் ரிங்கிட் சம்பள மானியம் அறிவிக்கப்பட்டது. இது இப்போது 13.8 பில்லியன் ரிங்கிட்டாக கூடியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் மார்ச் 27ஆம் தேதி மலேசிய அரசாங்கம் 250 பில்லியன் ரிங்கிட் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது.
அந்தத் திட்டத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் போதிய உதவிகள் இடம்பெறவில்லை என்று பரந்த அளவில் புகார்கள் கிளம்பின. இந்தச் சூழலில் இப்போதைய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊக்குவிப்பு திட்டங்கள் காரணமாக 4.8 மில்லியன் ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
இருந்தாலும் சம்பள மானியத்தைப் பெற வேண்டுமானால் முதலாளிகள் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் ஊழியர்களை வேலையில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை வழங்குகின்றன.
பொருளியலில் ஏறக்குறைய 40 விழுக்காட்டிற்கு அவை பொறுப்பு வகிக்கின்றன. ஆகையால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சீராக இருந்து வரவேண்டும் என்பது முக்கியமானது என்று தேசிய தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் முகைதீன் குறிப்பிட்டார்.
மாதம் 4,000 ரிங்கிட் வரை சம்பளம் பெறுகின்ற ஊழியர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு மாதாமாதம் 600 ரிங்கிட் மானியம் கிடைக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.
இப்போது ஒரு நிறுவனம் வேலையில் அமர்த்தி இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மானியம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் சிறு கடன்கள் தொகையும் மொத்தம் 700 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது. இத்தகைய கடன்களுக்கு 2 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று முன்பு குறிப்பிடப்பட்டது.
ஆனால் அந்தக் கடன்களுக்கு அறவே வட்டி கிடையாது என்று இப்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்கள் வர்த்தகக் கட்டடங்களில் வாடகைக்கு இருப்போருக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரை குறைந்தபட்சம் 30 விழுக்காட்டு வாடகைத் தள்ளுபடியைக் கொடுக்கும் வர்த்தகக் கட்டட உரிமையாளர்கள் அந்தத் தொகைக்கு வருமான வரி விலக்கைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைச் சமாளிக்க உதவி கிடைக்கவில்லை என்றால் ஏப்ரல் மாத முடிவில் 70 விழுக்காட்டு சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் பணப் புழக்கம் அறவே இருக்காது என்று சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கம் எச்சரித்து இருக்கிறது.
மலேசியாவின் 16 மில்லியன் ஊழியர்களில் கால்வாசி பேர் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அது உரத்தக் குரலில் அபாய சங்கு ஊதி இருந்தது.

