ரோம்: ஐரோப்பாவில் கிருமித் தொற்றால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நான்கு நாடுகளில் உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பல மில்லியன்கணக்கானவர்களை வீட்டிற்குள் முடக்கிய கட்டுப்பாட்டு அல்லது முடக்க நடவடிக்கைகளுக்குப் பலன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முடக்க நடவடிக்கை, கட்டுப்பாடுகளை நீட்டிக்கவோ அல்லது அவற்றை மேலும் கடுமையாக்கவோ அந்நாட்டு தலைவர்களை அது தூண்டியுள்ளது.
இதற்கிடையே, கிருமிப் பரவல் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் பொருளாதாரத்தின் சில பகுதிகளை மீண்டும் தொடங்குவதற்குமான எந்தவொரு முயற்சியையும் அதிகாரிகள் அலசிப் பார்க்கக்கூடும்.
உலகம் முழுவதும் 1.3 மில்லியன் பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 70,000த்தை நெருங்குகிறது.
இதில் ஆக அதிகமாக இத்தாலியில் 16,000 பேரும் ஸ்பெயினில் 12,000 பேரும் மாண்டனர்.
இதற்கிடையே, இத்தாலியில் கடந்த மார்ச் 19ஆம் தேதிக்குப்பின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் 525 பேர் மாண்டனர்.
ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை நேற்று தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு பிரான்சில் மாண்டவர்களின் எண்ணிக்கை குறைந்துஉள்ளது. இங்கு இதுவரை 8,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர்.
பிரிட்டனில் நேற்று முன்தினம் மாண்டவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய நாளைவிட குறைவு.

