கொரோனா தொற்று: பிரிட்டன், ர‌ஷ்யா, ஐவரி கோஸ்ட், உக்ரேன்

2 mins read
40836738-e81f-40ff-80c9-a20499dd4e92
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 954 பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,343 ஆகியுள்ளது. ஏஎஃப்பி -

ர‌ஷ்யா: ஒரே நாளில் 1,000 பேருக்கு தொற்று

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 954 பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,343 ஆகியுள்ளது. ரஷ்யாவில் பதிவான ஆக அதிக அளவிலான எண்ணிக்கை இது. நாடு முழுவதும் 47 பேர் மாண்டனர்.

ஐவரிகோஸ்ட்: கொரோனா மருத்துவமனையை அடித்து நொறுக்கிய மக்கள்

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டின் தலைநகரான அபிட்ஜனில், 100க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கக் கட்டப்படும் தற்காலிக மருத்துவமனையை அடித்து உடைத்தனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் தேசிய கீதத்தை உரக்க உச்சரித்தவாறு மருத்துவமனையை அடித்து நொறுக்கியதோடு அருகில் உள்ள கடைகளுக்கும் தீ வைத்தனர்.

உக்ரேன்: கதிர்வீச்சு அளவு உயர்வு

உக்ரேன்: உக்ரைனில் காட்டுத்தீ காரணமாக செர்னோபில் அணு உலையைச் சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட மண்டலத் தில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக உக்ரைன் சுற்றுச் சூழல் ஆய்வு மைய தலைவர் யெகோர் ஃபிர்சோவ் தெரி வித்துள்ளார். செர்னோபில் அருகே சுமார் 250 ஏக்கர் அளவில் காட்டுத் தீ எரிவதால், அப்பகுதியில் இயல்பைவிட 16 மடங்கு அதிகமாகக் கதிர்வீச்சு உள்ளது என்றார் அவர்.

இங்கிலாந்து ராணி: உறுதியுடன் செயல்பட்டால் மீண்டு வர முடியும்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிருமித் தொற்று குறித்து நாட்டு மக்களிடையே பேசிய காணொளி உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதில், "இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போதும் நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரமுடியும்," என்று பேசியிருந்தார். மேலும், குறித்த உரையின் போது நாட்டு மக்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வந்த தங்களது பொறுமை மற்றும் உறுதியினை மீண்டும் வெளிக்காட்டுவதற்கு மகாராணி அழைப்பு விடுத்தார்.