இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை தாயகத்துக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்பு விமானத்தில் ஏறுவதற்கு 8 மலேசியர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்துள்ளது.
அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற சமயக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம் என்ற காரணத்தால், புதுடெல்லியிலிருந்து கிளம்பிய விமானத்தில் ஏற அவர்களை அனுமதிக்கவில்லை.
சுற்றுலா விசாவில் இருந்துகொண்டு அந்த சமயக்கூட்டத்தில் பங்கேற்றதாக இந்தியா தயாரித்துள்ள கருப்புப் பட்டியலில் இருக்கும் 960 வெளிநாட்டவர்களில் பலர் மலேசியர்கள்.
தடுக்கப்பட்ட 8 மலேசியர்களும் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் அவர்கள் மலேசியாவுக்குச் செல்லும் மீட்பு விமானத்தில் ஏற பதிவு செய்திருந்ததாகவும் பெர்னாமா குறிப்பிட்டது.
டப்லிக் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் டெல்லியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இடங்கள் சுகாதாரமானவையாக இல்லை என்றும் சரியாக உணவு மற்றும் மருந்து கிடைக்கவில்லை என்றும் மலேசியாவில் இருக்கும் தம் குடும்பத்தாரிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியின் ராஜிவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது மலேசியர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணம் கொவிட்-19 உடன் தொடர்புடையதல்ல என்றும் கூறப்பட்டது.

