இந்தோனீசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை 2,700ஐ கடந்தது; 24 மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்தோனீசியாவில் இன்று (ஏப்ரல் 7) புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 247 எனப் பதிவாகியுள்ளது.

இந்தப் புதிய உச்சத்தை அடுத்து அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,738 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று மேலும் 12 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 221 ஆகியுள்ளது.

கொவிட்-19ஆல் ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனீசியாவில்தான் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 204. இந்நிலையில் அங்கு 14,300க்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் 24 மருத்துவர்கள் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்திருப்பதாக மருத்துவச் சங்கம் ஒன்று நேற்று தெரிவித்தது.

மருத்துவர்களுக்குப் போதுமான அளவுக்கு பாதுகாப்புக் கவசங்கள் இல்லாததே அவர்களது உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மருத்துவர்களின் மரணம் இரு மடங்காக இந்த வாரம் உயர்ந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று தெரிவித்த  இந்தோனீசிய மருத்துவர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஹால்க் மாலிக், “எப்படியாவது மருத்துவர்களைக் காக்க வேண்டும்,” என்றார்.

இந்தோனீசியாவில் ஜூலை மாத வாக்கில் கொரோனா கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ கடந்து விடும் என்று அந்நாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.