பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித் தொற்றுக்குக் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்த சீனாவில் நேற்று முதன்முறையாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சீனாவில் கிருமித் தொற்று மையமாக இருந்த ஹுபெயின் வூஹான் நகரத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடு சென்று சீனா திரும்பியவர்களிடையே பதிவான கிருமித் தொற்று எண்ணிக்கையும் நேற்று குறைந்ததாக சீனா அறிவித்துள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைளின் பலனாகக் கடந்த சில வாரங்களாக சீனாவில் உள்ளூர் கிருமித் தொற்று சம்பவங்கள் ஒன்றிரண்டு மட்டுமே பதிவாகி வந்த நிலையில், வெளிநாடு சென்று திரும்பியவர்களால் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் சீனாவிற்குள் வரத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை 3,000ஆக குறைக்கப்பட்டது.
இதுதவிர, வெளிநாடு சென்றுவிட்டு சீனாவிற்குத் திரும்பும் சீன குடிமக்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 32 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 38ஆக இருந்தது.
வெளிநாட்டிலிருந்து சீனாவிற்குத் திரும்பிய 983 பேர் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலம் கிருமிப் பரவுவதும் சீனாவிற்கு இன்னொரு தலைவலியாக உள்ளது.
நேற்று முன்தினம் அறிகுறிகள் இல்லாத 30 பேருக்குக் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் வெளிநாட்டினர். 18 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று முன்தின நிலவரப்படி சீனாவில் மொத்தம் 81,740 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,331 பேர் பலியாகினர்.

