புத்ராஜெயா: கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்சன் ஆகிய இரு கட்டடங்களில் கடுமையான கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட உத்தரவு நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களில் கொவிட்-19 கிருமித் தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடமாட்ட உத்தரவு மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அறிவித்தார்.
இவ்விடங்களில் பெருமளவிலான வெளிநாட்டினர் உட்பட சுமார் 6,000 பேர் தங்கியுள்ளனர்.
அவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
நேற்று நடப்புக்கு வந்த இந்த கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை முடியும் வரை நடப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான், பங்ளாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கட்டடங்களில் அதிகம் வசிப்பதால் மலேசிய அரசு அந்தந்த தூதரகங்களோடு இணைந்து பணியாற்றும் என்று மலேசியா கூறியுள்ளது.

