பிணவறைகளில் இடமில்லை; தத்தளிக்கும் நியூயார்க்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுக்கடுக்காகப் பலர் மாண்டு வருவதால் அங்கிருக்கும் பிணவறைகளில் இடமில்லாமல் போய்விட்டதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதனால் நியூயார்க் நகரின் சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி நியூயார்க்கில் 3,485 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, நியூயார்க்கில் உள்ள பெரிய தேவாலயம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர், மரண எண்ணிக்கை அதிகரிப்பு
பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,834 அதிகரித்து 99,225ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு தொடர்ந்து நான்கு நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெர்மனியில் கிருமித்தொற்று காரணமாக மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,607ஆக அதிகரித்துள்ளது.
முடக்கநிலை விதிமுறையை மீறிய நியூசிலாந்து அமைச்சர்
வெலிங்டன்: கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள நியூசிலாந்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முடக்கநிலையை மீறி அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் தமது குடும்பத்தைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். இதற்கு வருத்தம் தெரிவித்த திரு கிளார்க், தமது அமைச்சர் பதவியிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் கொரோனோ கிருமித்தொற்றால் மற்ற நாடுகளைய் போல நியூசிலாந்தும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால் அதை எதிர்கொள்ள அவர் தமது பணியைத் தொடர்கிறார். ஆனால் அவரது பதவி குறைக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னாள் பிரதமர் கிருமித்தொற்றால் மரணம்
திரிப்போலி: கடாஃபியின் ஆட்சி கவிழ்ந்ததும் லிபியாவின் பிரதமராகப் பதவியேற்று 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பதவி இழந்த திரு மஹ்முத் ஜிப்ரில், கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாண்டார்.
பொய்ச் செய்தி: தகவல் அனுப்புவதை கட்டுப்படுத்தும் வாட்ஸ்அப்
சான் ஃபிரான்சிஸ்கோ: கொரோனா கிருமித்தொற்று தொடர்பான பொய்ச் செய்திகள் பரவுவதைக் குறைக்க பிறரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கட்டுப்படுத்துகிறது. நேற்றிலிருந்து பிறரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்பிவைக்கலாம்.
கிருமித்தொற்றுக்கு மத்தியில் தேர்தல் நடத்த போலந்து திட்டம்
வார்சோ: அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று அதிபர் தேர்தலை நடத்த போலந்து திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவையில் தபால் மூலம் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை மோசடிக்கு எளிதில் இலக்காகும் சாத்தியம் அதிகம் இருப்பதாக போலந்தில் உள்ள மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
எல்லையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்திய பின்லாந்து
ஹெல்சிங்கி: சுவீடனுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை பின்லாந்து தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சுவீடன் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க பின்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே அதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டிவிட்டு சுவீடனிலிருந்து பின்லாந்துக்குச் செல்லலாம். அவ்வாறு வருபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

