அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் கிருமித் தொற்றுக்குப் பலியாகினர். இது உலகளவில் ஒரே நாளில் ஏற்பட்ட ஆக அதிக உயிரிழப்பாகும்.
ஒரே நாளில் 1,939 பேர் மாண்டதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி அமெரிக்காவில் கிருமித் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 12,722ஆக அதிகரித்துள்ளது.
13,798 பேரைப் பலிகொடுத்த ஸ்பெயின், 17,217 பேரைப் பலிகொடுத்த இத்தாலியின் எண்ணிக்கையை அமெரிக்கா நெருங்குகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று வளைவின் உச்சத்திற்கு அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் ஆனால் வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளிடம் இருந்து அதற்கான எழுத்துப்பூர்வ எச்சரிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். ஆனால் கணிக்கப்பட்டதைவிட பலி எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ், அண்மைய மாதிரி தகவல்களின்படி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் கிருமித் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 82,000த்திற்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்காவின் கொவிட்-19 பணிக்குழு, அந்நாட்டில் தொற்றுநோயால் 100,000 முதல் 240,000 பேர் வரை இறக்கக்கூடும் என்று முன்னர் கூறியிருந்தது.
இதற்கிடையே, அமெரிக்காவின் கிருமித் தொற்று மையமான நியூயார்க்கில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் நிகழ்ந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க் மாநிலத்தில் நேர்ந்தவை.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் ஏற்பட்ட மரணங்களில் 731 உயிரிழப்புகள் நியூயார்க்கில் ஏற்பட்டவை. அங்கு மொத்தம் 5,500 பேர் மாண்டனர்.
அதுபோல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதாகக் கூறினார் அதன் ஆளுநர் கேவின் நியூசாம்.

