பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டிய நான்காவது நாடு பிரான்ஸ்
பாரிஸ்: பிரான்சில் நேற்று முன்தினம் 1,417 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்சில் கொரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 10,328ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் இதுவரை 109,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு பிரான்சில் 10,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கிருமித் தொற்றுக்குப் பலியாகினர்.
சுவீடனில் மேலும் 114 பேர் பலி
ஸ்டாக்ஹோம்: சுவீடனில் செவ்வாய்க்கிழமையன்று மேலும் 114 பேர் கிருமித் தொற்றுக்குப் பலியானதையடுத்து, மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 591ஆக அதிகரித்துள்ளது. இது மற்ற நாட்களில் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகம் என்றாலும் முந்திய நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என்று சுவீடன் சுகாதார முகமை கூறியுள்ளது. அங்கு சுமார் 7,500 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகங்களை மூடியது இத்தாலி
ரோம்: கொரோனா தொற்று காரணமாக இத்தாலிய துறைமுகங்களைப் பாதுகாப்பானதாகக் கருத முடியாது என்பதால் புலம்பெயர்ந்தவர்களின் படகுகள் அணைய அனுமதிக்க முடியாது என்று இத்தாலிய அரசாங்கம் கூறியுள்ளது.
ஜெர்மானிய அரசு சாரா குழுவால் இயக்கப்படும் ஒரு கப்பல் லிபியாவிலிருந்து சுமார் 150 பேரை அழைத்துக் கொண்டு இத்தாலி நோக்கிச் சென்றதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புலிட்சர் விருது வெற்றியாளர் அறிவிப்பு ஒத்திவைப்பு
ஊடகத்துறைக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் புட்லிசர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதை அறிவிக்கும் குழு உறுப்பினர்களும் மூத்த ஊடகவியலாளர் களும் கொரோனா குறித்த செய்தி சேகரிப்பில் முழு கவனம் செலுத்தி வருவதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த வாரியத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி: லட்சத்தைத் தாண்டியது
பெர்லின்: ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.
புதன்கிழமையன்று 4,288 பேருக்கும் அதற்கு முந்திய நாளில் 3,252 பேருக்கும் என வேகமாக கிருமித் தொற்று பரவியுள்ளது அந்நாட்டு மக்களைக் கவலையுறச் செய்துள்ளது.
ஐரோப்பாவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நான்காவது நாடான ஜெர்மனியில் இதுவரை 2,016 பேர் மாண்டுவிட்டனர்.
ஜெர்மனியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வேகமாக கிருமிப் பரவி வருகிறது.

