கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 109 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின.
இது கடந்த இரு வாரங்களில் பதிவாகி இருக்கும் ஆகக் குறைவான எண்ணிக்கை.
இவர்களையும் சேர்த்து மலேசியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,228.
கிருமிப் பரவல் தொடர்பான ஆக அண்மைய விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம விளக்கிய மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் கடந்த இரு நாட்களாக இந்த நல்ல நிலவரம் தொடருகிறது என்றும் கூறினார்.
"109 புதிய சம்பவங்கள் பதிவான நிலையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 121 பேர் கிருமி பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
"மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,608. மலேசியா முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இது 38 விழுக்காடு. இன்று மரணமடைந்த 23 வயது பெண்ணே கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர்.
"தைராய்ட் நோயாளியான அவர் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்தார்," என்று அவர் விளக்கினார்.

