தோக்கியோ: தலைநகர் தோக்கியோவிலும் இதர ஆறு பகுதிகளிலும் அவசரநிலை நடப்புக்கு வந்து விட்டபோதிலும் ஜப்பானில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறையாமல் 5,000ஐ தாண்டிவிட்டது என்று அந்நாட்டின் அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியுள்ளது. அவசர நிலை நடவடிக்கை எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதை இது காட்டுவதாகவும் என்எச்கே தெரிவித்தது.
கொரோனா கிருமிப் பரவலால் வட்டார நாடுகள் மோசமான நிதி நிலவரத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடான ஜப்பானின் நிச்சயமற்ற நிலை ஆக உச்சத்தை அடைந்திருப்பதாகவும் ஜப்பானின் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு இவ்வாரத் தொடக்கத்தில் அது நடப்புக்கு வந்தது.
இப்படிப்பட்ட மோசமான நிதி நிலவரத்தில் கிருமித்தொற்றுக்காக நாட்டை முடக்கி வைத்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று ஜப்பான் அதிகாரிகள் கருதினர். எனவே முடக்கம் இல்லாமலேயே கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அவசரநிலையின்போது மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் வர்த்தகங்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளும் அதிகாரம் உள்ளூர் ஆளுநர்களுக்குத் தரப்பட்டது. ஆயினும் நேற்றைய நிலவரப்படி எல்லாம் வழக்கநிலையில் இயங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது. இரவுநேர பொழுதுபோக்குக் கூடங்களை உள்ளடக்கிய ஷிபுயா, அகாசாகா மற்றும் ஜின்ஸா ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அமைதி நிலவியதாகவும் அச்செய்தி தெரிவித்தது.
அவசரநிலை அமலில் இருந்தநிலையிலும் அன்றாட கிருமித்தொற்று சம்பவங்கள் பெரிய அளவில் குறையவில்லை. மாறாக, புதன்கிழமை 503 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே அங்கு பதிவான ஆக அதிகமான அன்றாட எண்ணிக்கை. இருப்பினும் நேற்று பிற்பகல் வரை 29 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5002 ஆனது.

