கொரோனா: மலேசியாவில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு

கொரோனா: மலேசியாவில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு

2 mins read
e6feb561-66fb-40de-b81d-bfb73b4186c5
மலேசியாவில் தனிநபர் பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் இறங்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள். படம்: இபிஏ -

மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகமாக இருக்கிறது என்றாலும் அதனால் ஏற்படக்கூடிய மரண விகிதம் இதர பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

இது மட்டுமின்றி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் ஏறக்குறைய பாதி பேர் குணமடைந்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய மரண விகிதம் இதர பல நாடுகளில் 4% முதல் 5% வரை உள்ளது.

ஆனால் மலேசியாவில் இந்த விகிதாச்சாரம் 1.58 விழுக்காடாக இருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க அமைச்சின் மருத்துவர்களும் சிறப்பு வல்லுநர்களும் அரும்பாடுபட்டு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

"நிலவரங்களை வைத்து பார்க்கையில், மலேசியாவில் வார்டுகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவை தலைசிறந்த நிலையில் இருக்கிறது. மனநிறைவு தருமளவில் உள்ளது.

"நோயாளிகளுக்கு நம்முடைய சிறப்பு வல்லுநர்களும் தீவிர கண்காணிப்புப் பிரிவு மருத்துவர்களும் தலைசிறந்த சிகிச்சை அளித்து வருகிறார்கள்," என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கொரோனா கிருமி தொற்றியோரில் 5 விழுக்காட்டினர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குணமடைந்துவிட்டனர்.

மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 70 பேர் மாண்டுவிட்டனர். 4,346 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் 1,830 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இந்த விகிதம் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 38 விழுக்காடாக உள்ளது.

இதனிடையே, மருத்துவ கையுறைகளைத் தயாரிக்கும் உலகின் ஆகப் பெரிய நிறுவனமான கிளவ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் முகக்கவசங்களைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக முகக்கவசங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் இவ்வாறு திட்டமிடுவதாக அதன் உயர்நிலை அதிகாரி ஒருவர் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலகளவில் புழங்கும் ஐந்து கையுறைகளில் ஒன்றை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 110 மில்லியன் கையுறைகளைத் தயாரிக்கும் வசதியை இன்னும் இரண்டு மாத காலத்தில் இந்த நிறுவனம் பெற்றிருக்கும்.

குறிப்புச் சொற்கள்