அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மட்டும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியை மிஞ்சியது.
வியாழக்கிழமையன்று பதிவான 10,000 கிருமித் தொற்று சம்பவங்களை அடுத்து, நியூயார்க்கில் 159,937 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட 153,000 பேரையும் இத்தாலியில் பாதிக்கப்பட்ட 143,000 பேரையும் விட நியூயார்க் எனும் ஒரேயொரு நகரத்தில் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை அதிகம்.
ஆனால் கிருமித் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஸ்பெயின் (15,500), இத்தாலியைவிட (18,000) நியூயார்க்கில் (7,000) குறைவு.
ஆனால் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 200ஆகக் குறைந்துள்ளது, கிருமிப் பரவல் மட்டுப்படுவதற்கான அறிகுறி என்ற நம்பிக்கை ஒளி தெரிகிறது என்று கூறினார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவில் 465,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,513 பேர் மாண்டனர்.
இதற்கிடையே, கிருமித் தொற்றால் மாண்டவர்களின் சடலங்கள் நியூயார்க்கில் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்படுகின்றன.
ஹார்ட் தீவிலுள்ள பிராங்க்ஸ் எனும் பகுதியில் இந்த சடலங்கள் புதைக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு முறை இயங்கி வந்த இந்த இடத்தில், தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் சடலங்களைப் புதைக்கும் பணி நடக்கிறது.
முன்பு சடலங்களைப் புதைக்கும் பணியைச் சிறைக் கைதிகள் செய்து வந்தனர்.
ஆனால் கிருமித் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், தற்போது சடலங்களைப் புதைக்கும் பணி ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

