சோல்: தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் அங்கு மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமை யைத் தவறாமல் நேற்று நிறைவேற்றத் தொடங்கினர்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 15ல் நடக்கிறது. ஆனால் அன்று அதிகக் கூட்டம் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் நேற்று கொரோனா நோயாளிகள் வாக்கு அளித்தனர். அவர்களுக்கு என்றே தனிப்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முன் வாக்குப்பதிவு இன்றும் நடக்கிறது. இந்த இரண்டு நாட்களிலும் 3,500 வாக்குச் சாவடிகள் செயல்படும்.
தலைநகர் சோல், டேவூ நகரம் உள்ளிட்ட கொவிட்-19 பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிக்சை பெற்று வரும் 3,000 பேருக்கும் அதிக நோயாளிகளும் 900 மருத்துவ ஊழியர்களும் வாக்கு அளிப்பதற்காக அதிகாரிகள் எட்டு வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளனர். அதிபர் மூன் ஜே, அதிபர் மாளிகை அருகே இருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தென்கொரியாவில் மொத்தம் 10,450 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் பலியாகிவிட்டனர். 7,117 பேர் குணமடைந்துள்ளனர். 3,125 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 46,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

