தாய்லாந்து: 50 பேர் பாதிப்பு, பலி
பேங்காக்: தாய்லாந்தில் நேற்று புதிதாக 50 பேரை கொரோனா கிருமி தொற்றியது. 43 வயது மாது ஒருவர் அந்தக் கிருமிக்குப் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக கொரோனா கிருமி தொற்றியோரில் 27 பேருக்கு மற்ற நோயாளிகளிடம் இருந்து கிருமி பரவியது. எட்டு பேருக்கு எப்படி கிருமி பரவியது என்பது தெரியவில்லை. மூவர் வெளிநாட்டில் இருந்து கிருமியுடன் வந்தவர்கள் என்று கொவிட்-19 நிர்வாக மையம் என்ற அரசாங்க அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
தாய்லாந்தில் ஜனவரி முதல் இதுவரை மொத்தம் 2,473 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது. 33 பேர் மரண மடைந்துவிட்டனர். 1,013 பேர் குணமடைந்துள்ளனர்.
ஜப்பான் நகரம் எச்சரிக்கை
தோக்கியோ: ஜப்பானில் கொரோனா கிருமித்தொற்றைத் துடைத்து ஒழிக்கும் வகையில் அந்த நாடு ஒருமாத கால அவசரநிலையை அறிவித்துள்ளது.
அந்த ஒரு மாத காலத்தின்போது செயல்படவேண்டாம் என்று பல தரப்பட்ட நிறுவனங்களை தோக்கியோ கேட்டுக்கொள்ளும் என்று அந்த நகர ஆளுநர் தெரிவித்தார். அதேவேளையில், புராதன கியோட்டோ நகரம் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கிறது என்றும் ஆகையால் சுற்றுப் பயணிகள் யாரும் அந்த நகருக்கு வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியா: புதிய கட்டுப்பாடு
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை மக்கள் மீறாமல் இருப்பதற்காக அதிகாரிகள் போலிஸ் சோதனைச்சாவடிகளை அமைத்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர்களும் இதில் ஈடுபடுத்தப்படும். குற்றவாளிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டில் கொரோனா கிருமிப் பரவல் மெதுவடைந்து வருகிறது என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் திங்கட்கிழமை வரை ஈஸ்டர் விடுமுறை. ஆகையால் மக்கள் தேவாலயங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் அதிகம் செல்வதுண்டு.
ஆனால் வழிபாட்டு இடங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டு பேருக்கு மேல் கூட்டம் போடக்கூடாது என்றும் அவசியம் இருந்தலொழிய யாரும் வெளியே போகக்கூடாது என்றும் தடை போடப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வியட்னாம் போட்டி
ஹனோய்: கொவிட்-19 கிருமி சீனாவின் வூஹானில் பிறந்தது. இதனால் அந்த நாட்டுக்கு உலக அளவில் கொஞ்சம் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இதை மாற்றவும் கொரோனாவை ஒழிப்பதில் பொறுப்புடன் நடந்துகொள்ளும் வகையிலும் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளுக்கு மருத்துவப் பொருட்களையும் பாதுகாப்பு உடைகளையும் அதிக அளவில் சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆனால் இதில் சீனாவுக்குக் கடும் போட்டியாக வியட்னாம் திகழ்கிறது. சீனா அளவுக்குத் தன்னிடம் வளம் இல்லை என்றாலும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளுக்கு 550,000 முகக்கவசங்களை வியட்னாம் அனுப்பி உள்ளது.
அதோடு, பக்கத்து கம்போடியா நாட்டுக்கு 390,000 முகக்கவசங்களையும் லாவோசுக்கு 340,000 கவசங்களையும் வியட்னாம் அனுப்பி உள்ளது.
விழிப்பு நிலையில் பசிபிக் நாடுகள்
மெல்பர்ன்: புயல் அடித்து உயிர்ச் சேதத்தையும் சொத்துச் சேதத்தையும் ஏற்படுத்தி இருந்தாலும் பசிபிக் நாடுகள் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக விழிப்பு நிலையில் இருந்து வருகின்றன.
சாலமன் தீவுகள், வனுவாட்டு, பிஜி, தோங்கா ஆகிய நாடுகளில் ஹரால்டு என்ற சூறாவளி புயல் வீசியது. அதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டது. சுற்றுலா இடங்கள் அழிந்தன. சாலமன் தீவுக்கு அருகே கடலில் ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டதில் டஜன் கணக்கான மக்கள் மாண்டனர். ஏராளமான சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், புயல் ஓய்ந்து இருந்தாலும் கொரோனா பயம் இன்னும் இருந்து வருகிறது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பிஜி பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் விழிப்பு நிலையில் இருந்து வரவேண்டும். அவர்கள் சுகாதார உத்தரவுகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பிஜியில் கொரோனா தொற்று 20 பேரைப் பாதித்துள்ளது என்றாலும் அங்கு இதுவரை யாரும் பலியாகவில்லை. கொரோனாவை தவிர்த்துக்கொள்ளும் வகையில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகள் அங்கு நடப்புக்கு வந்துள்ளன.

