நோம்பென்: கம்போடிய நாடாளுமன்றம் நேற்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
கொரோனா கிருமித்தொற்றைச் சமாளிக்கும் வகையில் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான வழியை அந்தச் சட்டம் ஏற்படுத்தித் தருகிறது.
இப்படி ஒரு நிலையைத் தான் அமல்படுத்தக்கூடும் என்று பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை நடப்புக்கு வந்தால், தகவல்தொடர்புகள் கண்காணிக்கப்படும். ஊடகம், சமூக ஊடகம் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்களிடம் அச்சத்தை, கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய, அல்லது தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல் கட்டுப்படுத்தப்படும் அல்லது தடை செய்யப்படும்.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டால் பிரதமர் அதிக அதிகாரங்களைப் பெறுவார் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கைக் குரல் எழுப்பி உள்ளன.
கம்போடியாவில் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளையும் மனித உரிமை அமைப்புகளையும் ஊடகத்தையும் ஹுன் சென் ஒடுக்கிவருகிறார் என்று பல காலமாகவே மேற்கத்திய நாடுகள் குறைகூறி வருகின்றன. கம்போடியாவில் நேற்றுடன் 119 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளது.

