கொவிட்-19: ஐரோப்பிய நாடுகள்

கொவிட்-19: ஐரோப்பிய நாடுகள்

2 mins read
b75ac0f3-6c1a-4fce-8f4c-f9762f337ad3
பிரஞ்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் வாகனங்களில் பயணம் செய்வோரின் வெப்பநிலையைச் சோதிக்கும் காவல்துறை அதிகாரி. படம்: ஏஎப்பி -

பிரான்ஸ்: உடற்பருமனால் கிருமித்தொற்று அபாயம்

பாரிஸ்: உடற்பருமன் இருப்பது கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து என்று பிரான்ஸ் தலைமை தொற்று நோயியல் மருத்துவரான பேராசிரியர் ஜீன் ஃபிரானோயிஸ் கூறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக அமெரிக்கர்களில் அதிகமானோர் உடற்பருமனாக இருப்பதால் அங்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.

உடற்பருமனாக உள்ளவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதால், அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

'சுகாதார பணியாளர்கள் புனிதர்கள்'

வாட்டிகன்: ஐரோப்பாவின் வத்திகன் சிட்டியில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு சில பேருடன் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொலைக்காட்சியிலும், இணையத்தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், இத்தாலியில் கொரோனா நோயாளிகளைக் கவனித்துக்கொண்ட சுகாதார பணியாளர்கள் பலர் உயிரிழந்தனர் என்றும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அவர்கள் புனிதர்கள் என்றும் பாராட்டினார்.

இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களில் 10 விழுக்காட்டினர் சுகாதார பணியாளர்கள்

மிலான்: உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 18,200 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கொரோனாவுக்குச் சிகிச்சையளித்து வந்த 100 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் தொற்று பாதித்துப் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதில், கடந்த மாதம் மீண்டும் பணிக்குச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர்களும் அடங்குவர். நாட்டில் ஒட்டுமொத்தமாக தொற்றுக்கு ஆளானவர்களில் 10 விழுக்காட்டினர் மருத்துவத் துறையில் பணிபுரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஈரான்: 4,232 பேர் உயிரிழப்பு

துபாய்: ஈரானில் கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 4,232ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

68,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,969 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள ஈரானில் 35,465 குணமடைந்துள்ளனர்.