ஜெனீவா: கொவிட்-19 நெருக்கடி தொடர்பில் நடப்புக்குக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை நாடுகள் உடனே அகற்றினால், ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மெல்லக் குறைப்பதற்கான வழிகளைச் சில நாடுகள் பரிசீலித்து வந்தாலும் உடனடியாக அவற்றை ரத்து செய்வதும் ஆபத்தானது என்று ஜெனிவாவில் இணையத்தின்வழி நடந்தேறிய செய்தியாளர் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அடேனம் கேப்ரியேசஸ் கூறினார்.உலகில் கிட்டத்தட்ட பாதி அளவில் மக்கள் ஏதோ ஒருவகை முடக்கநிலையால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.
வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவது குறித்து சில நாடுகள் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் விருப்பமும்கூட என திரு டெட்ரோஸ் குறிப்பிட்டார்."கட்டுப்பாடுகளை வேகவேகமாக அகற்றுவதால், கிருமித்தொற்று மீண்டும் ஆபத்தான அளவில் அதிகரிக்கக்கூடும். நிலைமையைச் சரியாக சமாளிக்காவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
"கட்டுப்பாடுகளைப் படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் அகற்றும் உத்திகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் உலக சுகாதார நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார் அவர். கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு முன் ஆறு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திரு டெட்ரோஸ் அறிவுறுத்தினார். நாட்டில் கிருமித்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; மக்களுக்குப் போதுமான பொது சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும்; பராமரிப்பு இல்லங்களில் கிருமித்தொற்று அபாயம் குறைந்தபட்சத்தில் இருக்கவேண்டும்; வேலையிடங்களிலும் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருக்க வேண்டும்; வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய கிருமித்தொற்று அபாயம் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்துடன் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதில் மக்களின் ஈடுபாடு அவசியமென திரு டெட்ரோஸ் சுட்டினார்.

