தாய்லாந்து: மேலும் மூவர் மரணம்
பேங்காக்: தாய்லாந்தில் நேற்று கொரோனா கிருமித் தொற்றுக்குப் புதிதாக மூன்று பேர் பலியாகிவிட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 33 பேரைக் கிருமி தொற்றியது என்றும் மொத்தம் 2,551 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டதாகவும் அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர்.
கொரோனா கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்காக தாய்லாந்தில் இந்த மாதம் முடியும் வரை அவசரநிலை நடப்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான வர்கள் தலைநகர் பேங்காக்கில் உள்ளனர். ஆகையால் பேங்காக்கில் காலவரம்பற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் அதிகரிக்கிறது
பெய்ஜிங்: சீனப் பெருநிலத்தில் சனிக்கிழமை புதிதாக 99 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அளவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகம்.
இதனால் அவர்கள் நாட்டுக்கு வரும் பயணிகளை சோதிக்கும் நடைமுறைகளைத் தீவிரப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா கிருமித்தொற்று சூழலில் முகக்கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை சீனா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் தரம் குறைந்தவை என்று ஐரோப்பாவில் புகார்கள் கிளப்பி உள்ளன. இந்த நிலையில், சீனா அவசியமான நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது. இதன் விளைவாக ஏற்றுமதிகள் தாமதமடையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீனாவின் குவாங்சூ நகரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆப்பிரிக்கர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சீனா மீது அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.
கலவரம், சதித்திட்டம்: இந்தோனீசியாவில் ஐவர் கைது
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் எதிரொலியாக மக்கள் அச்சத்தில் பலவற்றுக்கும் போராடுவதாகக் கூறப்படுகிறது.
கிருமிப் பாதிப்பு அதிகம் உள்ள ஜாவா தீவில் தீ மூட்டும் படியும் கொள்ளையடிக்கும்படியும் மக்களைத் தூண்டிவிட முயன்றதாகக் கூறப்படுவதன் பேரில் போலிசார் ஐவரைக் கைது செய்தனர். ஜாவா முழுவதும் ஏப்ரல் 8ஆம் தேதி கலவரத்தை, குழப்பத்தை ஏற்படுத்த அனார்க்கோ சிண்டிகாலிஸ் என்ற ஒரு கும்பல் சதித்திட்டம் போட்டது. "நெருக்கடி வந்துவிட்டது. கொளுத்துவோம். பணக்காரர்களைக் கொல்வோம். வாழ்வோம் அல்லது சாவோம்" என்று சுவர்களிலும் மின்கம்பங்களிலும் எழுதிவைத்து அந்தக் கும்பல் நாச வேலையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கொரோனா பாதிப்புச் சூழலில் அரசு அமலாக்கும் கொள்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மக்கள் பயந்துபோய் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அந்தக் கும்பல் முயல்வதாக அதிகாரிகள் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் எச்சரிக்கை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் நல்ல முறையில் பின்பற்றி வருகிறார்கள். ஒரு மீட்டர் விதியை மீறாமல் நடந்துகொண்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை இப்போதே அகற்றக்கூடாது என்று அந்த நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டான் முர்ஃபே தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 57 பேர் பலியாகி உள்ளனர். 6,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.

