லண்டன்: எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் கிருமிப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் கிருமிப் பரவலின் இரண்டாவது அலையைத் தடுக்கும் நோக்கிலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 200 மில்லியன் பவுண்டு (S$ 351.8 மில்லியன்) நிதியளிப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் ஒரு லட்சத்தைத் தாண்டியதாகவும் ராய்ட்டர்ஸ் கணக்கெடுப்பு கூறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இத்தொற்று அடையாளம் காணப்பட்டதிலிருந்து 210 நாடுகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் கிருமித் தொற்றால் இதுவரை கிட்டத்தட்ட 10,000 பேர் மாண்டுவிட்டனர். இது உலகளவில் ஐந்தாவது அதிக எண்ணிக்கையாகும்.
அமெரிக்கா (20,601), இத்தாலி (16,606), ஸ்பெயின் (19,468), பிரான்ஸ் (13,832) ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் நேர்ந்து உள்ளன.
இந்நிலையில் பேசிய பிரிட்டன் உதவி அமைச்சர் அன்னே-மேரி ட்ரெவல்யன், "இப்போது ஏழை நாடுகளுக்கு உதவுவதால் கிருமித் தொற்று மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்புவதைத் தடுக்க உதவும்," என்றார்.
130 மில்லியன் பவுண்டு ஐக்கிய நாட்டு அமைப்பின் முகமைகளுக்குச் செல்லும் என்றும் உலக சுகாதார அமைப்புக்கு 65 மில்லியன் பவுண்டு கொடுக்கப்படும் என்று பிரிட்டன் அரசாங்கம் கூறியுள்ளது.
இதுதவிர போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் பவுண்டு செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் 20 மில்லியன் பவுண்டு மற்ற அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கும் செல்கின்றன.
உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு உதவுவதாகவும் அதனால் அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்கு முரணாக உலக சுகாதார அமைப்புக்கு நிதி ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் கூறியுள்ளது.
பிரிட்டனின் இந்த தாராள பங்களிப்பு, கிருமித் தொற்று உலகளாவிய அச்சுறுத்தல் என்பதையும் அதற்கு ஒன்றுபட்ட நடவடிக்கை தேவை என்பதையும் அது வலியுறுத்துகிறது," என்றார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்.

