பெய்ஜிங்: சீனாவில் ஆறு வாரங்களுக்குப் பிறகு ஆக அதிகமாக நேற்று முன்தினம் 108 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, ரஷ்யாவுடனான எல்லைப் பகுதி தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டு
உள்ளது.
சீனாவில் பெரும்பாலும் உள்ளூர் கிருமிப் பரவல் சம்பவங்கள் இல்லாத நிலையில், அங்கு படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். எனவே, அங்கு விரைவில் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களால், சீனாவில் கிருமித் தொற்றின் 2வது அலை வீசக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை 108 கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாகின. கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி பதிவான 143 சம்பவங்களுக்குப் பிறகு இது ஆக அதிகமான எண்ணிக்கையாகும்.
108 பேரில் 98 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பாதிப் பேர் ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்வில் இருந்து சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்திற்குத் திரும்பிய சீன நாட்டினர் ஆவர்.
சீனாவிற்கான அனைத்து விமானங்களையும் ரஷ்யா ரத்து செய்துவிட்ட நிலையில், நிலம் வழியாகத் தாயகத்திற்குத் திரும்புவதே ரஷ்யாவில் உள்ள சீனர்களுக்கான ஒரே வழியாக உள்ளது.
இதையடுத்து, கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் எல்லை நகரமான சூஃபென்ஹேவில், வூஹானில் மேற்கொள்ளப்பட்டது போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சூஃபென்ஹே மற்றும் ஹார்பின் நகரங்களுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் 28 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாஸ்கோவில் இருந்து ஏப்ரல் 10ஆம் தேதி எஸ்யூ208 விமானத்தில் வந்த 60 பேருக்குக் கிருமித்தொற்று உள்ளதாக ஷங்காய் சுகாதார ஆணையம் தெரிவித்தது.
கிருமித்தொற்றுக்குப் பயந்து பலர் சூஃபென்ஹே நகரத்தைவிட்டு வெளியேறுவதாகவும் ஆனால் இன்னும் பலர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்நகர மக்கள் கூறினார் கள்.

