ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் இம்மாதம் 1ஆம் தேதி கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட 97 வயது கினா டால் கொலெட்டோ உயிரோடு திரும்ப மாட்டார் என பலர் தப்புக் கணக்கு போட்டனர்.
ஆனால் அவர்களுடைய அவநம்பிக்கையையும் மீறி அவர் நேற்று நலமுடன் வீடு திரும்பினார்.
சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியேறிய அவரை சுற்றி நின்றிருந்த மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களும் கைதட்டி ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
பிரேசிலில் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து மீண்டு வந்த ஆக வயதான மூதாட்டி இவராகத்தான் இருக்க முடியும்.
அவர், குணமடைந்தது பலருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டால் கொலெட்டோவுக்கு 11 உடன்பிறந்தோர் உள்ளனர். இருந்தாலும் துறைமுக நகரான சான்ேடாசில் அவர் தனியாக வசித்து வந்தார் என்று விலா நோவா மருத்துவ மனையின் அறிக்கை குறிப்பிட்டது.
"எப்போதும் அவர் துடிப்புடன் இருப்பார். சைக்கிள் ஓட்டுவது, கடைத் தொகுதிகளுக்குச் செல்வது, சமையல் செய்வது ஆகியவை அவருக்குப் பிடித்தமான பொழுது போக்குகளாகும்," என்றும் அறிக்கை கூறியது.
டால் கொலெட்டோவுக்கு ஆறு பேரப் பிள்ளைகளும் ஐந்து கொள்ளுப் பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் உடனடியாக அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
கிருமியின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசிலில் இதுவரை 1,223 பேர் கிருமிக்கு பலியாகிவிட்ட னர். தற்போது அங்கு 22,169 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

