மேட்ரிட்: கொரோனா கிருமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று.
கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். இதையடுத்து நாட்டை முடக்கி வைக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் கட்டுப்பாடுகளை அந்நாட்டின் அரசாங்கம் தளர்த்தி வருகிறது.
நிலைகுத்தியுள்ள பொருளியலை மீட்டெடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
தயாரிப்புத் துறை, கட்டுமானத் துறை மற்றும் சில சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்ப அனு மதிக்கப்படும். அதே சமயத்தில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். நாட்டில் உள்ள எஞ்சிய மக்கள் தொடர்ந்து வீட்டிலேயே தங்க வேண்டும்.
ஸ்பெயினில் கொரோனா கிருமிக்கு 16,970 பேருக்கு மேல் பலியாகிவிட்டனர். ஆனால் புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மூன்று நாட்களாகத் தொடர்ந்து கிருமியால் நாள்தோறும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் சற்றுகூடி 619 பேர் மாண்டனர் என்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிய தொற்று சம்பவங்களும் பாதியாகக் குறைந்துள்ளன. ஞாயிற்றுக் கிழமை அன்று 4,167 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 166,019 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
ஐரோப்பாவில் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி.
ஏறக்குறைய 19,900 பேர் இறந்துவிட்டனர். இருந்தாலும் இன்று முதல் சில நிறுவனங்கள் செயல்பட இத்தாலிய அரசாங்கம் அனு மதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

