லண்டன்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை அவர் வீடு திரும்பினார். கிருமித் தொற்று சந்தேகத்தின் பேரில் 55 வயது போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆனால் ஏப்ரல் 5ஆம் தேதி அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாளே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஏப்ரல் 9ஆம் தேதி வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களும் தாதியர்களும் கண் இமைக்காமல் அவரை கவனித்துக் கொண்டனர்.
தேசிய சுகாதார சேவையின் மருத்துவமனை தனது உயிரைக் காப்பாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று வீடு திரும்பினேன்," என்று டுவிட்டரில் பதிவேற்றிய ஐந்து நிமிட காணொளியில் பிரதமர் கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜென்னி, போர்ச்சுகல்லைச் சேர்ந்த லுயிஸ் ஆகிய இரு தாதியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இரு தாதியர்களும் தமது படுக்கைக்கு அருகே நின்று 48 மணி நேரம் தம்மை கவனமாக கவனித்துக் கொண்டதாக திரு போரிஸ் ஜான்சன் கூறினார்.
பிரிட்டனில் கொரோனா கிருமி அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 980ஐ தாண்டியது. சனிக்கிழமை வரை மொத்தம் 10,612 பேர் மாண்டு விட்டனர்.

