கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், தாதியர் தனிநபர் பாதுகாப்பு கவசங்களை அணிந்து பணியாற்றுவது நாமறிந்ததே.
ஆனால், எத்தனை கவசங்கள், எத்தனை கையுறைகள்!
மருத்துவர் ஒருவர் பாதுகாப்புக் கவசத்தை அணியும் காணொளி ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது இலங்கையில் இயங்கும் வசந்தம் பண்பலை வானொலி.
(காணொளியை முழுமையாகக் காண முழுத்திரை பொத்தானை அழுத்தவும்.)
3.29 நிமிடங்களுக்கு நீடிக்கும் அந்தக் காணொளியில் மருத்துவர் ஒருவர் பாதுகாப்புக் கவசங்களை அணிவது காட்டப்பட்டுள்ளது. அதைப் பார்த்தாலே கொரோனா கிருமியின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு கவசங்கள் சற்று மாறுபட்டாலும் அவற்றை அணிந்து இருப்பதும் சிரமமானதே என்பது அந்தக் காணொளியைப் பார்க்கும்போது கண்கூடு.
அத்தனை கவசங்களையும் அணிந்து பல மணி நேரத்துக்குப் பணியாற்றுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.
தங்களுக்கு குடும்பங்கள் இருந்தாலும் நோயாளிகளுக்காக பல மருத்துவர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தியாகம் மகத்தானது.
எந்த நாடாக இருந்தாலும் சரி. சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலும் பாரத்தை ஏற்றாமல் இருக்க நம்மால் ஆனதைச் செய்வதே உத்தமம்.
அரசாங்கம் அறிவித்துள்ள நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து தனித்திருந்தாலே அது மருத்துவப் பணியாளர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.
வசந்தம் பண்பலை தமது ஃபேஸ்புக் பதிவில், "தயவுசெய்து வைரஸின் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள் அரசாங்கம் விடுகின்ற அனைத்துவிதமான அறிவுரைகளையும் கடைப்பிடியுங்கள். எங்களுக்காக பணியாற்றுகின்றவர்கள் இவர்கள்...," என்று குறிப்பிட்டுள்ளது.

