பெய்ஜிங்: சீனாவில் நேற்று புதிதாக 46 பேருக்குத்தான் கொரோனா கிருமி தொற்றியது என்றும் இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 89 ஆக இருந்தது என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்று குறைகிறது என்றாலும் ரஷ்யாவை ஒட்டி உள்ள சீன மாநிலங்களில் உள்ளூரிலேயே மக்களுக்கு கிருமி தொற்றுவதாகவும் இதற்கு ரஷ்யாவில் இருந்து சீனா திரும்புவோரே காரணம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
புதிதாக நேற்று கிருமி தொற்றிய 10 பேரில் எட்டு பேர் ரஷ்ய எல்லையை ஒட்டி உள்ள ஹெய்லோங்ஜியாங் என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
ரஷ்யாவில் இருந்து சீனா திரும்புவோர் மூலம் கிருமி இறக்குமதி ஆவதைத் தடுப்பதற்காக அந்த மாகாணத்தில் சீன அதிகாரிகள் மும்முரமாகக் களமிறங்கி இருக்கிறார்கள்.
ரஷ்யாவில் இருந்து வருவோர் மூலம் மங்கோலியா, ஷாங்காய் போன்ற இடங்களுக்கும் கிருமி பரவி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சீன-ரஷ்ய எல்லையில் உள்ள சில இடங்களை சீனா மூடி இருக்கிறது. புதிதாக கிருமி தொற்றியிருப்போர் உடலில் அறிகுறி எதுவும் வெளியே தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று தடுப்பு மருந்தை மனிதர்களுக்குக் கொடுத்து சோதித்து பார்ப்பதற்காக மேலும் இரண்டு மருந்து நிறுவனங்களுக்கு சீனா அனுமதி கொடுத்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா கிருமி பிறந்த இடமான வூஹானில் கொரோனா கிருமித்தொற்று மங்கி வருகிறது. இதனால் அந்த நகரில் செயல்பட்டு வந்த தற்காலிக மருத்துவமனை மூடப்பட்டுவிட்டது.
கொரோனா கிருமி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இருந்த சில நோயாளிகளும் வழக்கமான மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

