இந்தோனீசியா: முயற்சிகள் தீவிரம்
ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் தலைநகரம் ஜகார்த்தாவுக்கு அருகே உள்ள மேலும் பல இடங்களுக்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது. நாட்டில் அடுத்த மாதம் பண்டிகைக் காலம் என்பதால் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். பகுதி முடக்கத்தின்கீழ் 34 மில்லியன் மக்களைக் கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது, முகக்கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும், சமூக சமய நிகழ்ச்சிகளுக்குத் தடை உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 459 பேர் மாண்டு இருக்கிறார்கள். ஏறக்குறைய 5,000 பேரை அந்தக் கிருமி தொற்றி இருக்கிறது.
நியூசிலாந்து: சம்பளம் குறைப்பு
வெலிங்டன்: நியூசிலாந்தில் கொரோனா கிருமி காரணமாக பொருளியலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அடுத்த ஆறு மாதங்களுக்கு 20% சம்பளக் குறைப்புக்கு இணங்கி இருக்கிறார்கள். நியூசிலாந்தில் கொரோனா கிருமத்தொற்று பாதிப்பு காரணமாக அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், இதர சேவைகள் எல்லாம் மூன்று வாரமாக மூடிக்கிடக்கின்றன. பொருளியல் நிலைகுத்திப்போய் இருக்கிறது.
தாய்லாந்து: விமான தடை நீட்டிப்பு
பேங்காக்: தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த மாதம் முடிவு வரை நீட்டிக்கப்படுகிறது. தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று வரை 2,623 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 41 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 1,405 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனிடையே, நோந்தாபுரி, உடோன் தனி என்ற இரு மாவட்டங்களில் கிருமித்தொற்று குறைவதால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா: எச்சரிக்கை
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் தாதிமை விடுதி ஒன்றில் புதிதாக கொரோனா தலைகாட்டி இருக்கிறது. இதனை அடுத்து அந்த நாட்டின் பிரதமர் மோரிசன், புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனார். கொரோனா கிருமி, நாட்டில் சிறார்களைப் பாதித்து இருக்கலாம். ஆனால் அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியாவில் சுமார் 6,400 பேர் கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 61 பேர் மாண்டு விட்டனர். மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்று வேகம் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வியட்னாம்: புதிய சட்டம் அமல்
ஹனோய்: வியட்னாமில் கொரோனா கிருமித்தொற்று பற்றி இணையத்தில் வெள்ளம் போல் பல தகவல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. சமூக ஊடகத்தில் போலி செய்தியை அல்லது புரளியைக் கிளப்புவோருக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது. வியட்னாமில் கொரோனா கிருமித்தொற்றுக்கு இதுவரை 267 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் யாரும் மரணம் அடையவில்லை. குற்றவாளிகளுக்கு இப்போது விதிக்கப்படும் அபராதம், அந்த நாட்டில் கிடைக்கும் அடிப்படை சம்பளத்தைப் போல் மூன்று முதல் ஆறு மடங்கு வரை- அதாவது S$604 முதல் S$1,209 வரை இருக்கும். 1 மீட்டர் இடைவெளி நியதியை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கவேண்டும் என்றும் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

