கொவிட்-19 கிருமிப் பரவலுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே உலகமும் மக்களும் இயல்புநிலைக்குத் திரும்புவார்கள் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளுடன் காணொளி மூலம் இன்று (ஏப்ரல் 17) ஆலோசனை நடத்தியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
"உலகம் முழுவதையும் கொரோனா கிருமிப் பரவல் அச்சுறுத்தி வருகிறது, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 100,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.
"ஐரோப்பா, ஆசிய நாடுகளை அச்சுறுத்திய கொரோனா கிருமி அடுத்ததாக ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடக்கத்திலேய தடுக்காவிட்டால் பேரழிவை ஏற்படுத்திவிடும்.
"பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நாடுகள் வேகமாக மீண்டெழ வேண்டும், உலகளவில் நலம் பெற, தடுப்பூசி இருந்தால்மட்டுமே அக்கிருமியைக் கட்டுப்படுத்த முடியும்.
"2020ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து, அதிகபட்சமான வேகத்தில் செயல்படுவது அவசியம்," என்றார் குட்டரெஸ்.

