புத்ராஜெயா: தென் கொரிய சோதனைக் கருவிகளைப் பயன்படுத்த மலேசியா ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, கொரோனா கிருமித் தொற்று பரிசோதனை அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைக் கருவிகள் கிருமித்தொற்றை 84.4 விழுக்காடு கண்டறியக்கூடும் என்று அறியப்பட்ட பின்னர், சுகாதார அமைச்சு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் தென் கொரியாவிலிருந்து முதற்கட்ட பரி
சோதனை கருவிகள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெரிய குழுமங்களில் இருப்பவர்களையும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளவர்களையும் பரிசோதிக்க இது பயன்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, மலேசியாவில் நேற்று புதிதாக 110 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதே சமயம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 119 என நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதையடுத்து 5,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,766 ஆகும்.
நேற்று மேலும் ஒருவர் மரணம் அடைந்ததையடுத்து மலேசியாவில் கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.
கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த 66 வயது ஆடவருக்கு ஏற்கெனவே இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தது.

