கொவிட்-19: செய்திக்கொத்து 18-04-2020

கொவிட்-19: செய்திக்கொத்து 18-04-2020

2 mins read
8ab6d2ea-8265-4c1c-b36f-8d5be8c50b6f
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிருமிப் பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவு விநியோகிக்கும் தொண்டூழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் ஓராண்டு நீட்டிக்கப்படலாம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பொது வாழ்க்கை இன்னும் ஓராண்டுக்குப் பாதிக்கப்படலாம். கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1.5 மீட்டர் பாதுகாப்பான இடைவெளி போன்ற சில விதிமுறைகள் பல மாதங்களுக்கு நடப்பில் இருக்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

மலேசியாவில் புதிதாக 69 பேர் பாதிக்கப்பட்டனர்

கோலாலம்பூர்: மலேசியாவில் மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று குறைவான எண்ணிக்கையில் 69 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மூவருக்கு மூன்று நாள் சிறை

கோலாலம்பூர்: மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறி கோல்ஃப் விளையாடிய மூவரை போலிசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். நேற்று முன்தினம் கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடியதை லோ டெக் சான், 68, டான் சீ கியன், 59, இயூஜின் வோங் யாட் ஹோ, 37 ஆகியோர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். மூவருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதமும் மூன்று நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

டுட்டர்டே மிரட்டல்

மணிலா: கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மக்கள் மதித்து நடக்காவிட்டால் ராணுவம் சட்டத்தை கையில் எடுக்கும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே எச்சரித்துள்ளார்.

இந்தோனீசியாவில் கிருமி ஆட்டம்

ஜகார்த்தா: இந்தோனீசியா, பிலிப்பீன்சைவிட கிருமித் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 6,000ஐத் தொட்டது.