மருத்துவர், தாதியருக்கு உதவியாளராகப் பணியில் இறங்கிய சுவீடன் இளவரசி

மருத்துவர், தாதியருக்கு உதவியாளராகப் பணியில் இறங்கிய சுவீடன் இளவரசி

2 mins read
b8582983-84b3-48d5-b391-e759baa11be3
35 வயதான இளவரசி சோஃபியா, இணையம் வழியாக 3 நாள் சிறப்பு பயிற்சியை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெம்மெட் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளார். -

உலகம் முழுதும் கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா கிருமித்தொற்றால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் 100,000 நெருங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோஃபியா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

35 வயதான இவர், இணையம் வழியாக 3 நாள் சிறப்பு பயிற்சியை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெம்மெட் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளார்.

மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோஃபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் மருத்துவர், தாதியருக்குத் தேவையான உதவிகளைச் செய்வார் என்று கூறப்பட்டது.

சோபியாஹெம்மெட் மருத்துவமனையின் இணையம் வழிக்கல்வி, சுகாதாரம் குறித்த சில அடிப்படைப் பயிற்சிகளை வழங்குகிறது. சுத்தம் செய்தல், சமையலறையில் வேலை செய்தல், உபகரணங்களில் கிருமி நீக்கம் செய்தல் என பல அம்சங்கள் அந்தப் பயிற்சியில் இடம்பெறுகிறது.

இந்த பயிற்சியினை முடித்தவர்கள் சுகாதார ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க உதவ முடியும். தற்போது வாரத்திற்கு 80 பேர் என்ற வீதத்தில் மருத்துவமனை இந்த பயிற்சியினை தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறது.

இளவரசி சோஃபியா, தனது முதல் நாள் அனுபவம் பற்றி புகைப்படத்துடன் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற மருத்துவ உடையுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெகுவாகப் பரவி வருகிறது வருகிறது.

முன்னாள் மாடல் அழகியான சோஃபியா, கடந்த 2015ஆம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டதன் மூலம் அவர் அரச குடும்பத்தின் அங்கமானார்.

இளவரசர் ஃபிலிப்-சோஃபியா தம்பதிக்கு அலெக்சாண்டர் என்ற மகனும், கேப்ரியல் என்ற மகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்