15 மீ. உயரத்தில் மின் கம்பியில் தொங்கிய சிறுமி

இந்தோனீசியாவில் பான்டென்னில் தங்கிரான் என்ற பகுதியைச் சேர்ந்த குரூக் என்ற மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி 15 மீட்டர் உயரத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொங்கியதைக் காட்டிய ஒரு காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். குரூக் மாவட்டத்தில் சம்பவம் நிகழ்ந்த ஊரில் மின்துறை ஊழியர்கள் புதிதாக உயர் மின்னழுத்தக் கம்பிகளை மின்கம்பங்களில் இழுத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். 

அப்போது அந்த 9 வயது சிறுமி தரையில் கிடந்த மின்கம்பியைப் பிடித்துக்கொண்டு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். 

மின்துறை ஊழியர்கள் திடீரென கம்பியை மேலே தூக்கிக் கட்ட முயன்றபோது தொங்கியபடியே அந்தச் சிறுமியும் மேலே சரசரவென தூக்கப்பட்டார். 

சிறுமி தொங்கியதைக் கவனிக்காமல் ஊழியர்கள் 15 மீட்டர் உயரத்துக்குக் கம்பியை தூக்கிவிட்டார்கள். அப்போதும் அவர்கள் சிறுமியைப் பார்க்கவில்லை. ஆனால் சிறுமி போட்ட சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தரையில் கனமான மெத்தைகளைப் போட்டு சிறுமியை அதில் விழும்படி கேட்டுக்கொண்டார்கள். 

அவர்கள் சிறுமியைத் தாங்கி பிடித்துக்கொண்டார்கள்.

இலேசான காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தங்கிரான் வட்டார அவசரகால பிரிவின் தலைவர் கொசுருதின் விளக்கியதாக ஊட கங்கள் கூறின.