கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் மலேசியாவுக்கு உதவ சீனாவிலிருந்து வந்த மருத்துவக் குழு

2 mins read
893ef6ad-4efb-4b4d-a1cf-412d6c4a69cd
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால் வெறிச்சோடிக் காணப்படும் கோலாலம்பூர் சாலை. படம்: இபிஏ -

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியாவுக்கு உதவுவதற்காக சீன நாட்டு மருத்துவக் குழு இன்று (ஏப்ரல் 18) கோலாலம்பூர் வந்தது.

அந்தக் குழுவினரை சீன அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமானநிலையத்தில் தரையிறங்கிய அந்தக் குழுவின் எட்டு வல்லுநர்களை மலேசியாவுக்கான சீனாவின் தூதர் பாய் தியானும் மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரிகளும் வரவேற்றனர்.

சீன மருத்துவர்கள் மலேசியாவில் இரண்டு வார காலம் தங்கி இருப்பார்கள். கொரோனா கிருமியை எதிர்த்துப் போராடி அவற்றை ஒடுக்குவதில் தங்களுக்கு உள்ள அனுபவத்தையும் ஆற்றலையும் மலேசிய சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் சீன வல்லுநர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

இதன் மூலம் மலேசியாவுக்கு கொரோனா கிருமி எதிர்ப்பு போராட்டத்தில் உதவி கிடைக்கும் என சீனத் தூதர் தெரிவித்தார்.

மலேசியாவில் இன்று புதிதாக கிருமி தொற்றிய 54 பேரையும் சேர்த்து மொத்தம் 5,305 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று குணமடைந்த 135 பேரையும் சேர்த்து இதுவரை அங்கு 3,102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2,115 பேரில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; அவர்களில் 26 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இவ்வேளையில், மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பல மலேசியர்களின் உடல்நலமும் நல்வாழ்வும் பாதித்து இருப்பதோடு ரத்த வங்கிகளுக்கு புதிய பிரச்சினைகளும் மூண்டு இருக்கின்றன.

அந்த வங்கிகளில் ரத்த அளவு குறைந்துவிட்டது. ஆகையால் உடனடியாக ரத்த நன்கொடையாளர்களைத் தேட வேண்டிய தேவை அந்த வங்கிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் கொரோனா கிருமித்தொற்று சூழலில் யாரும் ரத்தம் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள்.

தங்களைக் கொரோனா கிருமி தொற்றிவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்