வாஷிங்டன்: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சில மாநிலங்கள் எடுத்துள்ள பாதுகாப்பான இடைவெளி, வீட்டிலேயே இருக்கும் உத்தரவு போன்ற
நடவடிக்கைகளை எதிர்த்து வலதுசாரிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
இதற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநிலங்களின் ஆளுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகளாவிய நிலையில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தின நிலவரப்படி மாண்டோர் எண்ணிக்கை 150,000ஐ கடந்துள்ளது.
அதில் அமெரிக்காவில் மாண்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 விழுக்காடாகும்.
அண்மையில் அமெரிக்காவில் இயல்புநிலை திரும்ப மூன்று நிலை திட்டத்தை அறிவித்த அதிபர் டிரம்ப், கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்த முடிவை மாநிலங்களிடம் விட்டுவிடப்போவதாக நேற்று முன்தினம் கூறினார்.
ஆனால் அதை அடுத்து செயல்பாடு வேறு மாதிரி இருந்தது. "மிச்சிகனை விடுதலை செய்!. மினிசோட்டாவை விடுதலை செய்" என்று அவர் நேற்று டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் கிருமித்தொற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடைவெளி விதிமுறையில் இரு மாநிலங்களும் தீவிரம் காட்டி வருகின்றன.
மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்க அவர் மக்களைத் தூண்டிவிடுவதாக மாநில ஆளுநர்கள் குறைகூறியுள்ளனர்.
கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள், கூட்டரசு அரசாங்கத்தின் உதவி இல்லாமல் நியூயார்க்கின் பொருளியல் மீண்டும் இயல்புநிலை திரும்பாது என்று அந்நகரின் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த அதிபர் டிரம்ப், "உங்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவ
மனைப் படுக்கைகளை வழங்கினோம். அவற்றில் பலவற்றை நீங்கள் பயன்படுத்தவில்லை. அவற்றில் பல படுக்கைகள் உங்களுக்குத் தேவையில்லாமல் போனது. பெரும் அளவிலான செயற்கை சுவாசக் கருவிகளை நியூயார்க்கிற்குத் தந்தோம். நீங்கள் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகளை நாங்கள் செய்தோம்," எனக் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிழப்பைச் சந்தித்துள்ள அமெரிக்க விவசாயிகளுக்கு உதவ 19 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள நிவாரணத் திட்டத்தை அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

