டென்மார்க்கில் ஒரு மாதம் கழித்து பள்ளி திரும்பிய மாணவர்கள்
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் ஒரு மாதம் கழித்து மாணவர்கள் பள்ளி திரும்பியுள்ளனர். கொரோனா கிருமித்தொற்று காரணமாக டென்மார்க்கில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய திட்டத்தைத் தொடங்கவிருக்கும் சிலி
சான்டியாகோ: கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தென்அமெரிக்க நாடான சிலி சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்திருப்போருக்கு அது சிறப்பு அட்டைகளை வழங்க இருக்கிறது. அவர்கள் மூலம் இனி கிருமி பரவாது என்பதையும் அவர்கள் வேலைக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பலாம் என்பதையும் அந்த அட்டை காட்டும். அந்த அட்டை வைத்திருப்போருக்கு இனி கிருமித்தொற்று ஏற்படாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் ஒரே நாளில் 4,785 பேருக்குக் கிருமித்தொற்று
மாஸ்கோ: ரஷ்யாவில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,785 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 36,793 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 21 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 313 பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டுள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் மக்கள் நடமாட்டத்துக்கு அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மாஸ்கோவில் மின்னிலக்க நடமாட்ட அனுமதிச் சீட்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதம் 30ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்கும்படி ரஷ்ய நாட்டவர்களுக்கு அதிபர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் கிருமித்தொற்றால் பாதிப்படைவோர் எண்ணிக்கை இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் விமானப் பயணிகள் முகக்கவசம் அணிய உத்தரவு
மொண்ட்ரியேல்: கனடாவில் விமானப் பயணிகள் அனைவரும் இனி முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விமானத்தில் ஏறும்போதும் பயணத்தின்போதும் பயணிகள் தங்கள் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என்று கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புதிய விதிமுறை நாளையிலிருந்து நடப்புக்கு வருகிறது.
வான்நோக்கி துப்பாக்கிகளால் சுடும் சடங்கை ரத்து செய்ய சொன்ன அரசியார்
லண்டன்: தமது பிறந்தநாளையொட்டி வான்நோக்கி துப்பாக்கிகளால் சுடும் சடங்கை ரத்து செய்யுமாறு பிரிட்டிஷ் அரசியார் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரிட்டிஷ் மக்கள் அவதியுற்று வரும் வேளையில் அரசியார் இவ்வாறு கூறியுள்ளார். எலிசபெத் அரசியாரின் 68 ஆண்டுகால ஆட்சியில் இத்தகைய கோரிக்கை முதல்முறையாக விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான்: 10,000 பேர் பாதிப்பு
தோக்கியோ: ஜப்பானில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 207 பேர் மரணமடைந்துவிட்டனர். 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் தோக்கியோவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் 2,796 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், ஜப்பான் போதிய அளவுக்கு கொரோனா சோதனைகளை சரிவர நடத்தவில்லை என்று புகார் கிளம்பி இருக்கிறது. ஆகையால் பரிசோதனைகளை முடுக்கிவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய பரிசோதனை நிலையங்களை அமைக்கவும் பொது மருத்துவர்களை இதில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா மரணம் அதிகரிப்பதால் ஜப்பான் முழுவதும் அவசரநிலை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து: 13 பேர் பாதிப்பு
வெலிங்டன்: நியூசிலாந்தில் சனிக்கிழமை புதிதாக 13 பேரை கொரோனா கிருமி தொற்றியது. அந்த நாட்டில் மொத்தம் 1,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில், சுகாதாரச் சேவைகளில் ஈடுபட்டு இருப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் மேலும் NS$200 மில்லியன் (S$172 மில்லியன்) முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 68 ஆகியது. இச்சூழலில், மனித நடமாட்ட கண்காணிப்பு செயலி கட்டாயமானதல்ல என்றாலும் அதைப் பெற பதியும்படி மக்களுக்குப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வேண்டுகோள் விடுத்தார். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 6,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா: பலி எண்ணிக்கை 4,632
ஷங்காய்: சீனாவில் ஏப்ரல் 17ஆம் தேதி புதிதாக 27 பேரை கிருமி தொற்றியது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் 16ஆம் தேதி 26 பேராக இருந்தது. சீனாவில் மொத்தம் 82,719 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏப்ரல் 17 நிலவரப்படி 4,632 பேர் மரணம் அடைந்தனர். இந்தப் புதிய இறந்தவர்களின் எண்ணிக்கை, சீனா முன்பு தெரிவித்து இருந்ததைவிட 1,000 அதிகம். இதனிடையே, கொரோனா கிருமி பிறந்த வூஹானில் குறிப்பிட்ட சேவைத்துறைகளைச் சேர்ந்த வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்த நகரை விட்டு வெளியே செல்ல விரும்பினால் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அரசாங்கம் நேற்று உத்தரவிட்டது.
தனிமையில் 700 கடலோடிகள்
தைப்பே: பாலாவ் என்ற பசிபிக் தீவு நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் உதவுவதற்குச் சென்ற தைவானின் கடலோடிகள் மூவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கடற்படையைச் சேர்ந்த 700 கடலோடிகளை தைவான் தனிமைப்படுத்துவதாக தைவான் சுகாதார அமைச்சர் சென் சுங் செய்தியாளர்களிடம் கூறினார்.

