சீனாவின் வூஹான் நகரிலுள்ள மிகவும் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஓர் உயிரியல் ஆய்வகத்தில் கொவிட்-19 நோய்க்கிருமி தோன்றியதாகக் கூறும் ஊகங்களை அந்த ஆய்வகத்தின் தலைவர் மறுத்துள்ளார். இவ்வாறு நடப்பதற்கான "எந்தச் சாத்தியமும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
கிருமிப்பரவலைச் சீனா கையாண்ட விதத்தின் வெளிப்படைத்தன்மையைப் பற்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வூஹான் 'வைரலாலஜி' நுண்ணுயிர் ஆய்வகத்தில் இந்நோய்க்கிருமி தோன்றியதா என்று அமெரிக்கா தற்போது ஆராய்கிறது.
வனவிலங்குகளை விற்கும் சந்தையிலுள்ள மிருகச் சடங்களின்மூலம் இக்கிருமி மனிதர்களுக்குப் பரவியதாக சீன விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இருந்தபோதும், கிரும்பிபரவல் அந்த ஆய்வு நிலையத்தின் பி4 ஆய்வுக்கூடத்திலிருந்து நோய்க்கிருமி பரவியதாக சில அனுமானங்கள் எழுந்துள்ளன.
"இந்தக் கிருமி எங்களிடமிருந்து பரவியிருக்கவே முடியாது," என்று பேராசிரியர் யுவான் சீமிங் தெரிவித்தார். தமது ஊழியர்கள் எவருக்கும் இந்நோய் தொற்றவில்லை என்று அவர் சீன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

