பிலிப்பீன்ஸில் 12 பேர் மரணம்
மணிலா: பிலிப்பீன்ஸில் நேற்று கொரோனா கிருமித் தொற்றால் 12 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து அங்கு மாண்டோர் எண்ணிக்கை 409 ஆனது. கிருமி தொற்றியோர் எண்ணிக்கை நேற்று 172 ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து இதுவரை பிலிப்பீன்ஸில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,259 ஆக உயர்ந்தது. இதுவரை 572 பேர் கிருமிப் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
செம்பனை எண்ணெய் ஆலையைச் சுற்றிலும் 11 பேருக்கு கொரோனா
கோலாலம்பூர்: மலேசியாவில் ஆக அதிகமாக செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலமான சாபாவின் ஒரு பகுதியில் செம்பனை உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன. அந்த வட்டாரத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகின் ஆகப் பெரிய செம்பனை கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான எஃப்ஜிபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஃபெல்டா சஹாபாத்தில் உள்ள செம்பனைத் தொழிற்கூடங்களிலும் ஆலைகளிலும் நடைபெற்று வந்த பணிகள் அத்தனையும் தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் அந்தப் பகுதிகளில் ஆட்கள் நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி நஸ்ரி மன்சூர் தெரிவித்தார்.
சீனாவில் 16 பேர் மட்டும் பாதிப்பு
பெய்ஜிங்: சனிக்கிழமை 16 பேரிடம் மட்டுமே கிருமித் தொற்று காணப்பட்டதாக சீனா தெரிவித்தது. இது மார்ச் 17ஆம் தேதிக்குப் பின்னர் ஆகக்குறைவான எண்ணிக்கை. அத்துடன் வெள்ளிக்கிழமை பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையும் 27 என குறைந்த அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய 16 நோயாளிகளில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற விவரத்தையும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது.
பாகிஸ்தான் நெருக்கடி தீர கைகொடுக்கும் அமெரிக்கா
இஸ்லாமாபாத்: கொரோனா கிருமிப் பரவலை எதிர்த்துப் போராட பாகிஸ்தானுக்கு 8.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில், "8 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய பங்களிப்புகளுடன் கொரோனா கிருமி பரவுவதை தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களை கவனித்துக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் அமெரிக்கா ஒத்துழைக்கிறது. அதற்காக 8 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய பங்களிப்பை அந்நாட்டுக்கு அமெரிக்கா அளிக்கிறது," என்று பால் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

