இஸ்தான்புல்: துருக்கியில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 82,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி சுகாதார அமைச்சர் கோக்கா தெரிவித்தார். அந்த நாட்டில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 1,890 பேர் மாண்டுவிட்டனர்.
சனிக்கிழமை வரைப்பட்ட 24 மணி நேரத்தில் 121 பேர் பலியாயினர். 3,783 பேரைக் கிருமி தொற்றியது என்றும் மத்திய கிழக்கில் துருக்கி, ஈரானை விஞ்சி படுமோசமாக இருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமி பாதிப்பைப் பொறுத்தவரையில், அந்தக் கிருமி பிறந்த சீனாவைத் துருக்கி ஏறக்குறைய நெருங்கிவிட்டது என்றும் அவர் கூறினார்.
நோயாளிகளுக்குக் கூடுமானவரையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இதுவரையில் 10,453 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்றும் சனிக்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 40,520 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் கோக்கா கூறினார்.
துருக்கியில் 31 நகர்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிவித்தது.

