ஷங்காய்: சீனாவில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 12 பேரை கொரோனா கிருமி தொற்றியது. யாரும் மரணம் அடையவில்லை என்று அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் ஏப்ரல் 19 நிலவரப்படி, மொத்தம் 82,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,632 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, நாட்டின் தெற்குப் பகுதியில் கோழி போன்ற பறவைகள் உயிரோடு விற்கப்படும் சந்தைகள் சிலவற்றை அரசாங்கம் திறப்பதாகக் தகவல்கள் கூறின.
பொதுமக்கள் தங்கள் கண்ணுக்கு எதிரே அறுத்துத் தரப்படும் கோழி போன்றவற்றை மட்டும் வாங்குகிறார்கள். ஏற்கெனவே அறுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பேரங்காடிகளில் விற்கப்படும் மாமிசத்தை இப்போது அவர்கள் வாங்குவதில்லை. கொரோனா கிருமித் தொற்றுக்குப் பிறகு மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் தெரிவித்தனர்.
வூஹானில் காற்பந்துக் குழு
ஷங்காய்: சீனாவில் கொரோனா கிருமி பிறந்த நகரான வூஹானைச் சேர்ந்த 'வூஹான் ஸால்' என்ற சூப்பர் லீக் காற்பந்துக் குழு மூன்று மாதங்களுக்குப் பிறகு பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் நகருக்குத் திரும்பியது. இதனை அந்தக் குழு டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தது. கொவிட்-19 காரணமாக வூஹான் ஜனவரி மாதம் அடைக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக அந்த வீரர்கள் குவாங்சூ நகரில் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். பிறகு அவர்கள் ஸ்பெயின் சென்றனர். வூஹான் மூடப்பட்டதால் அந்தக் காற்பந்துக் குழுவினர் ஸ்பெயின் உள்ளிட்ட பல இடங்களில் 104 நாட்களைக் கழிக்க வேண்டி இருந்தது.
வூஹானில் முகக்கவசத்துடன், ரசிகர்கள் கொடுத்த பூக்கொத்துகளுடன் காணப்பட்ட வீரர்களைக் கண்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

