பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிராமிய வளர்ச்சி துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகம்மதின் வீட்டிற்குச் சிலர் கேக்குடன் வந்தனர். அந்த அமைச்சரின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் காட்டும் புகைப்படங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி இருந்தன.
இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ரஹ்மான், அந்தச் சம்பவம் யதார்த்தமாக நடந்தது என்றும் அதில் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதியை மீறும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
தன் வீட்டுக்கு கேக்குடன் வந்தவர்கள் தனது லிப்பிஸ் தொகுதி மக்களுக்கு அத்தியாவியப் பொருட்களை வழங்குவதில் உதவி செய்தவர்கள் என்றார் அமைச்சர்.
வீட்டில் இருந்து புத்ரா ஜெயாவுக்குப் புறப்பட்ட நேரத்தில் இரவு சுமார் 9 மணிக்கு அவர்கள் வந்த தாகவும் புத்ரா ஜெயாவுக்குப் புறப்பட்ட தன்னை வாழ்த்தி கேக்கை கொடுத்தார்கள் என்றும் அந்த நாள் தற்செயலாக தனது பிறந்தநாளாகவும் அமைந்துவிட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் அப்துல் ரஹ்மான் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் அங்கு ஒரு மீட்டர் இடைவெளி நியதி கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது.
இதனிடையே, லெங்கோங்கில் நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் அஸ்மி கஸாலியும் பேராக் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான ரஹ்மான் சக்காரியாவும் கலந்துகொண்டு உணவு உண்டதைக் காட்டும் பதிவுகள் சனிக்கிழமை சமூக ஊடகத்தில் இடம்பெற்று இருந்தன.
இதனைப் பார்த்த பலரும் குறைகூறி இருந்தனர்.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த திரு ரஹ்மான் சக்காரியா, அந்த நிகழ்ச்சி தொடர்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

