சொந்த ஊருக்கு 150 கி.மீ. நடந்தே சென்ற 12 வயது சிறுமி உயிரிழந்தார்

சொந்த ஊருக்கு 150 கி.மீ. நடந்தே சென்ற 12 வயது சிறுமி உயிரிழந்தார்

1 mins read

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

தெலுங்கானாவில் மிளகாய் தோட்டங்களில் பணிசெய்து வந்த ஜாம்லோ மக்தாம் என்கிற அச்சிறுமி, இம்மாதம் 15 தேதி 11 பேருடன் சேர்ந்து தமது சொந்த ஊரான பிஜப்பூர் மாவட்டத்திற்கு நடக்கத் தொடங்கினார்.

அக்குழுவினர் நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து காடு மற்றும் இலகுவான வழிகளை நடக்கத் தேர்ந்தெடுத்தனர். இந்த நிலையில், குழுவினருடன் சேர்ந்து மூன்று நாட்களாக நடைப்பயணம் மேற்கொண்ட சிறுமி, தமது வீட்டை நெருங்கிவிட்ட வேளையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.

சனிக்கிழமையன்று அவரது வீட்டிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். அரசாங்க ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது.

உயிரிழந்த சிறுமியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கடுமையான அளவு குறைந்ததால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். கொரோனா தொற்றால் அச்சிறுமி பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமது மகள் மூன்று நாட்களாக 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததன் விளைவாக வாந்தி மற்றும் வயிற்று வலியினால் அவதிப்பட்டதாக அச்சிறுமியின் தந்தை அந்தோரம் மட்கம் குறிப்பிட்டார். அச்சிறுமி சரியாக உணவு உட்கொள்ளவில்லை அவருடன் நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் கூறினர்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்