ரயில் சேவைகளின் நேர இடைவெளியில் மீண்டும் மாற்றம்

ரயில் சேவைகளின் நேர இடைவெளியில் மீண்டும் மாற்றம்

1 mins read
970dbe65-037b-4d88-92ba-56ad0863d15a
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இன்று மாலை உச்ச நேரத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரயில் சேவைகளுக்கு இடையிலான நேர இடைவெளியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், இந்த வாரத்திலிருந்து ரயில்களில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் இன்னும் கூட்ட நெரிசல் நீடிக்கிறது என்று பயணிகள் கடந்த வாரம் குறைகூறியதை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நேரத்தில் ரயில் சேவைகளுக்கு இடையிலான நேர இடை வெளி மூன்று நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அது ஐந்து நிமிடங்களாக இருந்தது.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை ஆகிய ரயில் பாதிகளில் நடப்புக்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை என்ற முறையால் அதிருப்தியடைந்த பயணிகள் கூட்டல் நெரிசலான ரயில்களின் படங்களை ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதன் காரணமாக, போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், "ரயில்களுக்கு சேவைகளுக்கு இடையிலான நேர அளவை மீண்டும் பரிசீலிக்கும்படி நிலப் போக்குவரத்து ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்," என்று கடந்த சனிக்கிழமை கூறினார்.

"கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள இந்த காலத்தில் ரயில்களிலும் பேருந்துகளிலும் ஏறும் பயணிகள் பாதுகாப்பு இடைவெளியைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

"நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து நடத்துநர்களும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். தேவை ஏற்பட்டால் ரயில் சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்," என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்